★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Tuesday, November 20, 2012

இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் பாகம் -1


            அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.  இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. - (வெளிப்படுத்தின விசேஷம் 22:11).

             இந்த அதிகாரத்தோடு வேதாகமம் முடிவடைகிறது. தேவன் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தை கடந்த சில நாட்களாக நாம் படித்து வருகிறோம். 'இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது' (வெளிப்படுத்தின விசேஷம் 1:3) என்ற வார்த்தைகளின்படி இந்த வசனங்களை வாசித்த நாமும், அதை வாசிக்க கேட்டவர்களும், இதில் எழுதியிருக்கிறபடி கைக்கொள்ள நினைக்கிற ஒவ்வொருவரும் பாக்கியவான்கள். இந்த வார்த்தைகளை நமக்கு கொடுத்து, நாம் கடைசி காலத்தில் நடக்க இருக்கிற சம்பவங்களை குறித்து அறிந்து கொள்ள தேவன் பாராட்டின கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். இவைகளை வாசிப்பது மட்டுமல்ல, அதன்படி நடக்க நாம் ஒவ்வொருவரும் தீர்மானிப்போம். ஏனெனில், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று சொன்ன கிறிஸ்து சீக்கிரம் வருகிறார். மாரநாதா!
.
              'பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்' (22:1). இந்த இடத்தில் திரியேக தேவனை காண்கிறோம். தேவனும், ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து, சுத்தமான நதியாகிய ஜீவத்தண்ணீரூற்றான பரிசுத்த ஆவியானவரும் ஒன்றாக இருப்பதை காண முடிகிறது. 'நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்' என்று இயேசுகிறிஸ்து    யோவான் 4:14-ல் பரிசுத்த ஆவியானவரை குறித்து சொன்ன வார்த்தைகளைப்போல் பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி புறப்பட்டு வருகிறது.
.
                'நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்' (2ம் வசனம்). அந்த சுத்தமான நதியின் இருகரையிலும், பன்னிரண்டு கனிகளைத் தரும் ஜீவ விருட்சம் இருந்தது. இங்கு நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் இல்லை. ஏதேனில் ஆதாமையும், ஏவாளையும் பாவத்திற்குட்படப்பண்ணின அந்த நன்மை தீமை அறியத்தக்க மரம் இங்கு இல்லை. ஆனால், ஜீவ விருட்சம் இருந்தது. அது ஒரு மரமா அல்லது மரங்களா என்று சரியாக தெரியாவிட்டாலும், 12 மாதங்களும் அது கனிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த கனிகளும், அந்த மரங்களின் இலைகளும், அங்கு இருக்கிற, வாசம் செய்கிற ஜனங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அங்கு வியாதி இல்லை ஏனெனில், ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய கனிகளும், இலைகளும் இருப்பதால்.
.
          'நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்' (எசேக்கியேல் 47:12) என்று இந்த மரங்களைக் குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசியும் எழுதியிருக்கிறார்.
.
               'இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்' (3-7 வசனங்கள்). இனி ஒரு சாபமுமில்லை, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் பரிசுத்த விசுவாசிகளோடு இருப்பார்கள். அவர்கள், அவரை எந்த நேரமும் தரிசிப்பார்கள், அவரையே தொழுதுக் கொள்வார்கள்.  அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றியில் இருக்கும், அதாவது அவர்கள் என்றென்றும் அவருக்கே சொந்தமானவர்கள் என்பதை குறிக்கும் வண்ணம், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றியில் இருக்கும். அங்கு தமிழ்நாட்டில் இப்போது இருக்கிற மின்வெட்டுகள் இருக்காது. ஏனெனில்,கர்த்தரே இங்கு வெளிச்சமாய் இருப்பார். சூரியன் கூட அங்கு ஒளிவீசத் தேவையில்லை, தேவ பிரசன்னமே அங்கு ஒளியைத்தரும்.
.
இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள் என்று கர்த்தரே இங்கு சாட்சி கொடுக்கிறார். இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் கேட்பது மாத்திரமல்ல, படிப்பது மாத்திரமல்ல, அதைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

             'யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.  அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.  இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (8-12 வசனங்கள்).
.
          அப்போஸ்தலனாகிய யோவான் இந்த பரலோக காட்சிகளை கண்டபோது, பரவசமடைந்தவராக, தான் என்ன செய்கிறோம் என்று அறியாதபடி, தேவதூதனின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்டார். அப்போது அந்த தூதன், 'நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள்' என்று தேவனையே தொழுது கொள்ளும்படி கூறுகிறார். சிலர் தேவதூதர்களை தொழுவதுண்டு, ஆனால் அப்படி செய்யக்கூடாது என்று தேவதூதன் தடுத்து, தேவன் மாத்திரம்தான் தொழுது கொள்ள பாத்திரர், அவரை மாத்திரம்தான் தொழுது கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே நாம் ஒருபோதும் தேவதூதர்களை தொழுது கொள்ளக்கூடாது. அப்படி செய்வது வேதத்தின்படி பாவமான காரியமாகும்.
.
           'இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது' என்று  ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே கூறுகிறார். 'தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்' (தானியேல் 12:4)ல் கடைசி கால எச்சரிக்கை புத்தகத்தை முத்திரைப்போடு என்று தானியேலுக்கு கூறப்பட்டது. ஆனால், நாம் இருக்கும் இந்த காலங்கள் கடைசி காலங்கள், ஆகவே முத்திரைப்போட வேண்டாம், அனைவரும் இவற்றை படிக்கட்டும், படித்து. கடைசி காலத்தில் நடக்க இருப்பதை அறிந்து, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாகட்டும் என்று இயேசுகிறிஸ்து முத்திரை போட வேண்டாம் என்று கூறுகிறார்.
.
         'அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.  இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். உலகத்தில் அநியாயம் பெருகி கொண்டே இருக்கிறது, குறையவேயில்லை, அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அதிகமாய் அசுத்தமாகிக் கொண்டேதான் இருக்கிறான். ஆனால், நீதி செய்கிறவன் சோர்ந்து போகாமல், இன்னும் நீதி செய்ய வேண்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று கூறுகிறார். பரிசுத்தத்தை காத்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
.
          கொஞ்ச காலம் பரிசுத்தமாயிருந்துவிட்டு, பின் அசுத்தத்திற்கு திரும்பினால், நாம் பரிசுத்தமாயிருந்ததினால் எந்த பயனும் இல்லை. கொஞ்ச காலம் நாம் நீதி செய்துவிட்டு, பின் அநீதி செய்ய ஆரம்பித்தால், அதினால் எந்த பயனும் இல்லை, நாம் நீதி செய்வதிலும், பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், 'இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது' என்று இயேசுகிறிஸ்து கூறினதைப்போன்று நமக்கு அதற்கேற்ற பலன் நிச்சயமாய் கிடைக்கும். ஆகவே நாம் பரிசுத்தத்திலும், நீதி செய்வதிலும் சோர்ந்து போகாமல், தொடர்ந்து, பரிசுத்தமாய் ஜீவிப்போமாக! இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்னவர் மிகச் சீக்கிரமாய் வருகிறார். ஆயத்தமாவோமா? ஆம், ஆண்டவரே சீக்கிரமாய் வாரும். ஆமென் அல்லேலூயா!

.
 
 சாலேமின் ராஜா சங்கையின் ராஜா 
 சுவாமி வாருமேன்
 இந்த தாரணி மீதினில் ஆளுகை செய்திட
 சடுதி வாருமேன்
.
 சீக்கிரம் வருவேன் என்றுரைத்துப்போன
செல்வக்குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித்
திரிகின்ற செய்தி கேளீரோ

ஜெபம்

         எங்கள் அன்பின் நேச தகப்பனே, இந்த கடைசி கால எச்சரிப்பை எங்களுக்கு கொடுக்கிற தயவிற்காக உமக்கு நன்றி. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று சொன்னீரே, நாங்கள் பரிசுத்தமாய் எங்களை காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. நீதி செய்வதில் நாங்கள் சோர்ந்து போகாதபடி காத்துக் கொள்ளும். உம்முடைய வருகைக்கு எங்களை ஆயத்தப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


No comments:

Post a Comment