★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Thursday, November 15, 2012

மனப்பூர்வமான ஊழியம்


       'மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்'.  - (எபேசியர் 6:6-8).

         ஒரு எஜமானிடத்தில் மூன்று வேலைக்காரர்கள் இருந்தனர். அவர்களில் இரண்டு பேருக்கு தங்களில் யார் தங்கள் எஜமானுக்கு அதிகமாய் வேலை செய்கிறார்கள் என்றும், யார் தங்கள் எஜமானுக்கு பிரியமானவன் என்றும் போட்டி எழுந்தது. அவர்கள் இரண்டு பேரும் தங்கள் எஜமானிடத்தில் போய், எங்களில் யார் பெரியவன்? யார் உமக்கு அதிகமாய் வேலை செய்கிறவன்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த எஜமான், 'அதை நீங்களே அறிந்து கொள்வீர்கள், நான் உங்களை தனியாய் அழைத்து ஒரு கேள்வியை கேட்பேன். நீங்கள் அதற்கு உண்மையாய் பதில்கொடுக்க வேண்டும் என்றார்.
.
         எஜமான் அவர்களில்  ஒருவனை தனியாய் அழைத்து, 'நீ எனக்காக என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'நான் பகல் முழுவதும் உம்முடைய நிலத்தில் உழுது, உமக்கு சாப்பிட தானியத்தை விதைத்து, அறுவடை செய்து கொண்டு வருகிறேன். இரவில் வீட்டில் உள்ள எல்லா விளக்குகளிலும் எண்ணெய் ஊற்றி, என் எஜமானராகிய உமக்கு வெளிச்சத்தை கொடுக்கிறேன். அதற்கு நீர் எனக்கு சம்பளத்தை தருகிறீர், ஆனால் ஒரு நாள் நான் அடிமைத்தன வேலையிலிருந்து விடுதலையாவேன் என்று நம்புகிறேன்' என்று கூறினான். அடுத்த வேலைக்காரனையும் அவர் அழைத்து, 'நீ எனக்காக என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'நான் படித்தவன், நான் கணக்கிலும், அறிவியலிலும், ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றவன். ஆகவே நான் உம்முடைய பிள்ளைகளுக்கு அவற்றை சொல்லி கொடுத்து, அவர்களையும் தேர்ச்சியுள்ளவர்களாக்குகிறேன். அதற்காக நீர் எனக்கு சம்பளம் தருகிறீர். ஓரு நாள் என்னை விடுதலையாக்குவீர் என்று நான் நம்புகிறேன்' என்று கூறினான்.
.
         அப்போது எஜமான், தன் அருகில் தாழ்மையோடு நின்று கொண்டிருந்த மற்ற வேலைக்காரனை பார்த்து, 'நீ எனக்காக என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவன், ' நான் உம்மை நேசிக்கிறேன் என்று உமக்கு தெரியும் எஜமானரே, நீர் என்னிடம் செய்ய சொல்வதை செய்வதே என்னுடைய பாக்கியம் என்று நான் நம்புகிறேன். நீர் என்னை கிரயம் கொடுத்து வாங்கினீர், ஆகவே நான் என் வாழ்நாள் முழுவதும் உமக்கு அடிமையாக இருக்கும்படி வாங்கப்பட்டவன், ஆகவே எனக்கு சம்பளம் எதுவும் இல்லை, ஆனால் நீர் மற்ற எஜமானர்கள் தங்கள் அடிமைகளை அடித்து வேலை வாங்குவதைப் போல் வேலை வாங்காமல் என் மேல் அன்பும் பாசமும் காட்டுகிறீர். ஆகவே நான் உம்மை நேசிக்கிறேன்' என்று கூறினான். அதை கேட்ட எஜமானர் மகிழ்ந்து ' நீதான் உண்மையிலே மற்ற இரண்டு பேரைவிட பெரியவன். ஆகவே நான் உன்னை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கிறேன்' என்று கூறினார்.
.
          உடனே, மற்றவர்கள், ' நீர் எப்படி அவனை விடுதலையாக்க முடியும்? நாங்கள் அயராமல் உமக்காக உழைக்கிறோம், உம்முடைய பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கிறோம். பகலெல்லாம் உம்முடைய நிலத்தில் உழுது, உமக்கு உணவு கொடுக்கிறோம். அவனோ எப்போதும் உம்மருகே இருந்து கொண்டு நீர் சொல்வதை செய்கிறான், அவன் எப்படி பெரியவானாவான்?' என்று முறுமுறுத்தனர். அதற்கு எஜமானர், ' ஆம் நீங்கள் இருவரும் நாள் முழுவதும் உழைக்கிறீர்கள், உண்மைதான். ஆனால் இந்த மனிதனோ எனக்காக மட்டும் உழைக்கிறான். நான் என்ன கட்டளையிடுவேன் என்று பொறுமையோடு அவன் காத்திருந்து, நான் கொடுக்கும் கட்டளையை உடனடியாக நிறைவேற்றுகிறான். அதற்காக அவன் சம்பளம் எதுவும் பெறவில்லை, ஆனாலும் அவன் என்னிடத்தில் உண்மையோடும், உற்சாகத்தோடும் வேலை செய்கிறான். ஆகவே நான் அவனை உங்களுக்கு மேலாக, உங்களுடைய மேலாளனாக அவனை வைக்கிறேன். அவனுடைய உண்மையும், என் மேல் அவன் வைத்த அன்பும் அவனை உயர்த்திற்று' என்று கூறினார்.
.
          நாம் கர்த்தருக்காக செய்யும் எந்த காரியத்தையும் ஒரு பலனை எதிர்ப்பார்த்து செய்கிறவர்களாக இல்லாமல், உள்ளத்தில் நிறைந்த அன்போடு, கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும். அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்ய வேண்டும். நிச்சயம் அவருக்காக நாம் படும் பாடுகளுக்கு பலன் உண்டென்றாலும், அந்த பலனை எதிர்ப்பார்த்து கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்களாக இல்லாமல், கர்த்தர் மேல் உண்மையான அன்போடும், உண்மையோடும் அவருக்கு ஊழியம் செய்து, கர்த்தர் என்ன சொல்லுகிறாரோ அதை பொறுமையோடு அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து, கேட்டு, உடனே அதன்படி செய்கிற எவரையும் கர்த்தர் நிச்சயமாய் கனம் பண்ணுவார். அவர்களை தேவன் உயர்த்துவார். அவர்களுக்கேற்ற பலனை நிச்சயம் அவருடைய வருகையில் தந்திடுவார். ஆமென் அல்லேலூயா!
.
ஊழியம் செய்வது பாக்கியமே - அதின்
பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஒர் நாள் வந்திடுவாரே
அன்று இதன்பலன் கொண்டுவருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்
...
யாரோ செய்யட்டும் எனக்கென்ன - நான்
நலமாய் இருந்தால் அது போதும்
என்றே சுயமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்று உணர்வாயோ இன்றே வா  
 
ஜெபம்
          எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்கள் நல்ல எஜமானரே, நாங்கள் உமக்காக செய்யும் எந்த ஊழியத்தையும், எதையும் எதிர்ப்பார்த்து செய்கிறவர்களாக இல்லாமல், உமக்கென்று மனப்பூர்வமாய் உம்முடைய சித்தத்தின்படி செய்ய எங்களுக்கு உதவி செய்யும். கிறிஸ்துவின் வருகையில் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று அழைக்கும்படி எங்கள் ஊழியங்கள் உண்மையோடு இருக்க உதவி செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


No comments:

Post a Comment