★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Saturday, December 1, 2012

ஆண்டவரின் ஆயிரம் வருட அரசாட்சி



          ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன்கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன்.  பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். -  (வெளிப்படுத்தின விசேஷம் 20:1-3).

         மேற்கண்ட இந்த மூன்று வசனங்களும் சாத்தானுக்கு துளியும் பிடிக்காத வசனங்கள். சாத்தான் 1000 வருடங்கள் பாதாளத்திலே எரியும் அக்கினியிலே போடப்படுவதை இந்த வசனங்கள் வெளிப்படுத்துகிறது.
.
         சாத்தான் இந்த உலகத்தில் இருக்கும் வரைக்கும் கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும், எல்லா பாவங்களின் உச்சக்கட்டங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் இயேசுகிறிஸ்து கூறினார், திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று. அவன் எப்போது பாதாளத்தில் தள்ளப்படுவோனோ அப்போது உலகம், ஆதியிலே தேவன் உருவாக்கின ஏதேன் தோட்டத்தைப் போல மாறும்.
.
        சாத்தானை பெரிய சங்கிலியிலே கட்டி வைத்து, பாதாளத்திலே தூதன் தள்ளிவிடுகிறான். மட்டுமல்ல, அவன் வெளியே வந்து விடாதபடி, அதின் மேல் முத்திரையும் போட்டு விடுகிறான்.

.
          தற்போது கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தும், பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தியும், முழுவதுமாக பாவத்தையும், சத்துருவையும் எடுத்துப் போட முடிவதில்லை. காரணம் சாத்தான் இந்த உலகத்தில் ஆதிக்கம் செய்வதினாலேயே. சத்துருவானவன் இருக்கும் வரைக்கும், அவனுடைய கிரியைகளும் இந்த உலகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டுதான் இருக்கும். கிறிஸ்துவானவர் வரும்போது, அவனை பாதாளத்தில் தள்ளிவிடும்போது, உலகம் ஒரு புதிய உதயத்தை காணும்.
.
         இயேசுகிறிஸ்து எருசலேமை தலைநகரமாய் கொண்டு, ஆயிரம் வருடங்கள் இந்த உலகை ஆளுகை செய்வார். அல்லேலூயா! கிறிஸ்து ஆளும் உலகத்தை எண்ணிப்பார்க்கவே எத்தனை இன்பம்! பரிசுத்தராகிய கிறிஸ்து ஆளும்போது, பாவங்கள் மறைந்து போகும். அசுத்தங்கள் மாறிப்போகும். காண சகிக்காத அசுத்தமான படங்கள், கொலைகள், கொள்ளைகள், சூதாட்டங்கள் எல்லாம் மாறிப்போகும். முக்கியமாக போர்கள் எதுவும் நடக்காது. சிரியாவிலும், உலகெங்கும் போரின் நிமித்தமாக அநியாயமாக மரித்துக் கொண்டிருக்கும் யுத்தங்கள் மாறிப்போகும். எங்கும் சமாதானம் சூழ்ந்திருக்கும். அல்லேலூயா!
.
          'அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும் (ஏசாயா 11:6-10) என்று ஆயிர வருட அரசாட்சியில் நடைபெறும் காரியங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
.
         சிங்கம் மாட்டைப்போல வைக்கோலை தின்னும் என்பதை நினைத்து பார்க்கும்போது, புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழியுமே மாறிப்போகும். புற்றிலே கையைப் போட்டாலும் பாம்பு கடிக்காது. இதையெல்லாம் பார்க்கும்போது, நிச்சயமாக எல்லா மிருகங்களின் தன்மைகளும் மாறிப்போய், எல்லாம் சாதுவாக மாறி விடுகிறது. அவைகள் எல்லாம் சைவ மிருகங்களாக மாறி விடுகின்றன. மிருகங்களே அப்படி மாறும்போது, ஆயிரம் வருட அரசாட்சியில் மனிதர்களும் சைவமாகவே மாறி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
.
          அதைவிட மிக முக்கியமானது, 'சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்'. இயேசுகிறிஸ்து ஆளுகை செய்யும்போது, அவரை அறிகிற அறிவினால் இந்த பூவுலகம் நிறைந்திருக்கும். மற்ற எல்லா மதங்களும் மாறிப்போகும். எல்லா மதம் பிடித்த மதவாதிகளும் தீவிரவாதிகளும் மாறி,  கர்த்தரை அறிகிற அறிவினால் நிரம்பி, அவரையே பின்பற்றுவார்கள். அதினால் நீதி நிறைந்திருக்கும். பாவம் மறைந்து போகும். எங்கும் நீதியும் நியாயமும் நிறைந்திருக்கும். அநீதியாய் நியாயம் தீர்ப்பது மறைந்து எங்கும் நியாயம் விளங்கும். எத்தனை அருமையான உலகமாயிருக்கும் அது! அல்லேலூயா!
.
       'இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்' (20:4-6).

.
         இந்த ஆயிர வருட அரசாட்சியில் நமக்கு கிடைக்கும் பாக்கியம், நாமும் கிறிஸ்துவோடுக்கூட ஆளுகை செய்வோம். அவரோடுக்கூட வெள்ளைக்குதிரைகளில் வருகின்ற சபையாகிய மணவாட்டியும், உபத்திரவ காலத்து பரிசுத்தவான்களும் அவரோடுக்கூட அரசாளுவார்கள். அல்லேலூயா!
.
          இயேசுகிறிஸ்து கூறின உவமையில் ஒரு இராஜா தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, ஒவ்வொருவருக்கும் பத்து இராத்தல் பணத்தை கொடுத்து தான் திரும்பி வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். 'அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்' (லூக்கா 19:15-17) என்று கூறினதுப்போல தேவன் நமக்கு கொடுத்த கொஞ்சத்தில் நாம் எத்தனை உண்மையுள்ளவர்களாயிருந்தோம் என்பதை பொறுத்து நமக்கு அதிக பொறுப்பை கொடுப்பார். அல்லேலூயா!
.
         எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகை ஆளுவார். அல்லேலூயா! இயேசுகிறிஸ்து முதன்முறையாக வந்தபோது, அவருடைய சீஷர்கள், அப்போதே கர்த்தருடைய அரசு வரும் என்று எதிர்ப்பார்த்து, இயேசுவிடம், செபெதேயுவின் குமாரர், 'உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்' (மாற்கு 10:37). அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த அந்த அரசாட்சிக்காலத்தை இப்போது  எருசலேமிலே தலைநகராய்க் கொண்டு இயேசுகிறிஸ்து அரசாளுவார். அப்போது அவருடைய நாமத்தில் முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் அவரே கர்த்தர் என்று அறிக்கை செய்யும். இதுமட்டுமல்ல, ஆயிரம் வருட அரசாட்சியில் இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் நடைபெறும். அதை எழுதினால் இந்த கட்டுரையின் பக்கங்கள் போதாது. இந்த அரசாட்சியின் போது நீங்கள் அவரோடு இருப்பீர்களா? ஆம், இருப்போம் என்று தைரியமாக சொல்வோமா? ஆமென் அல்லேலூயா!

 
 
 ஆயிரம் வருட அரசாட்சியே
 பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே
 பரம பிதா வேத வாக்கிதே
 மகிமை பொற்காலம் வருகின்றதே
.
 கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார்
கிடைக்கும் நல் நீதி எளியவர்க்கே
பரிபூரணமடைந்த வெண் தூயபக்தர்கள்
பரனோடு நீடுழி அரசாளவே

ஜெபம்

        எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம் ஐயா. நீதியும், நியாயங்களும் அவமாய் போய்க்கொண்டிருக்கும் இந்த காலத்தில், அவருடைய ஆட்சி எப்போது வரும் என்று நாங்கள் காத்திருக்கிறோம் தகப்பனே. சாலேமின் இராஜா சங்கையின் இராஜா சடுதி வாருமே என்று மணவாட்டி சபையாக நாங்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறோம். சீக்கிரம் வாரும். எங்களை உம்மோடுக்கூட அழைத்துச்செல்லும். இயேசுவோடுக்கூட அரசாளும் அந்த நாட்களை எதிர்நோக்கியிருக்கிறோம்.  .  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment