★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Thursday, November 22, 2012

தேவனுடைய உயர்ந்த வழிகள்


       பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.        - (ஏசாயா 55:9).

          அந்த கணவன் மனைவிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது. அதற்குள் குடும்பத்தில் அநேக பிரச்சனைகள். திருமணத்திற்காக வாங்கிய கடன்கள் கழுத்தை பிடிக்க, அனுதினமும் சண்டை சகஜமானது. ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்த்தபடி இல்லையே என இருவர் மனதிலும் அதிருப்தி. அப்பொழுதெல்லாம் அவர்களுக்குள் மனதில் எழுந்த கேள்வி, 'எனக்கு ஏன் ஆண்டவரே இந்த வாழ்க்கைத் துணையை கொடுத்தீர்? என்னை தேடி படித்த, அரசாங்க வேலை பார்க்கிற எத்தனையே பேர் வந்தார்களே? ஆனால் இறுதியில் எதற்கு இந்த வாழ்க்கைத துணையை கொடுத்தீர்?' என இருவரும் தங்களுக்குள் அங்கலாய்த்தனர்.
.
           ஒருநாள் அந்த மனைவி பக்கத்து வீட்டு பெண்ணின் வேதனையான வாழ்வை குறித்து கேட்க நேர்ந்தது. அப்படியே அதிர்ந்து போனாள். இப்படிப்பட்ட கணவன் கூட இருப்பார்களா? அவர் எவ்வளவு படித்தவர்! எத்தனை உயர் பதவியிலிருப்பவர்! அவரா இப்படி? அவருடனும் பொறுமையாய் இப்பெண் வாழ்கிறாளே' என ஆச்சரியப்பட்டாள். அப்படியென்றால் என் குடும்ப பிரச்சனை ஒன்றுமில்லையே என தன்னை ஆற்றினாள். அதன் பின் 'ஏன் இந்த கணவரைக் கொடுத்தீர்?' என்று ஆண்டவரை அவள் கேட்டதேயில்லை.
.
             அவள் உள்ளத்தில் நிறைந்து நின்றதெல்லாம், 'என் நினைவுகள் உன்னுடைய நினைவுகளல்ல, உன்னுடைய வழிகள் என் வழிகளுமல்ல, பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உன் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உன் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது' என்ற தேவ வார்த்தைகளே! அவ்வப்போது சிறுசிறு  பிரச்சனைகளும், போராட்டஙக்ளும் வந்தாலும் தேவ வசனத்தின் மூலம் தன்னை திடப்படுத்திக் கொண்டாள். 'இது தேவன் எனக்கு அமைத்துக் கொடுத்த வாழ்க்கை, அவர் எதை செய்தாலும் சிறப்பானதையே செய்வார். அவர் என் வாழ்வில் தவறு செய்கிறவரல்ல, தாயின் கருவிலேயே எங்களை இணைக்க முன்குறித்தவர், முடிவு பரியந்தம் நடத்த வல்லவர்' என்று கர்த்தரை துதிக்க ஆரம்பித்தாள். அவள் வாழ்க்கையில் இன்பம் பெருக ஆரம்பித்தது.
.
            பிரியமானவர்களே, அன்பு, பண்பு, தூய்மை, நேர்மை, மென்மை, பெருந்தன்மை, பாராட்டும் குணம், சுயநலமின்மை, நம்பகத்தன்மை ஆகிய நாம் அறிந்;த எல்லா நற்குணங்களும் உடையவர்களை நாம் உலகில் காண்பது மிகவும் அரிது. இவைகள் அத்தனையும் என் வாழ்க்கைத்துணையிடம் இருக்க வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
.
          மாறாக, இக்குணங்களில் சிலவற்றை நம் துணையிடம் காண்போமென்றால் அவற்றிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, பிற நல்ல குணங்களும் பெருகுவதற்கு அன்பு செலுத்தி, உறுதுணையாய் இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு முறுமுறுத்து கொண்டிருப்போமானால், அது குடும்ப வாழ்வையே முறித்து விடும்.
.
            மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் குடும்ப ஜெபம் வீட்டில் இருக்க வேண்டும். அப்போது, தேவனே எந்த நோக்கத்தோடு எங்களை குடும்பமாய் இணைத்தீரோ அந்த நோக்கத்தை எங்களிலே நிறைவேற்றுமே என்று ஜெபிக்க வேண்டும். தேவன் உங்களை குடும்பமாய் இணைத்ததற்கு நிச்சயமாக ஒரு நோக்கம் உண்டு. அதை அவரிடம் கேட்கும்போது நிச்சயமாய் நிறைவேற்றுவார்.
.
          நாங்கள் அப்படி ஜெபித்திருக்கிறோம். மற்றும் குடும்பமாக நாங்கள் ஊழியம் செய்ய தேவன் எங்களுக்கு கிருபை செய்யும் என்று ஜெபித்திருக்கிறோம். அந்த ஜெபத்தை கேட்டு தேவன் எங்களை அதிசயமாய் குடும்பமாய் உபயோகப்படுத்தி வருகிறார். அல்லேலூயா!
.
        நாம் மற்றவர்களைப் போல ஏதோ திருமணத்தில் இணைந்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவர்களுடைய திருமணத்தை காண்போம், பேரப்பிள்ளைகளை காண்போம் என்பதற்காக மட்டும், தேவன் நம்மை திருமண பந்தத்தில் இணைக்கவில்லை, அவருக்கு நம்மைக் குறித்த உயரிய நோக்கம் உண்டு. தேவனுடைய உயரிய நோக்கம் நிறைவேற நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்போது அவரது நோக்கம் நம் குடும்ப வாழ்வில் நிச்சயமாய் நிறைவேறும். ஆமேன் அல்லேலூயா!

.
 
நேர் சமனாம் நின் வழியோ 
சிறு தூரமோ மா தொலைவோ 
எவ்வித துயர்க்கடலோ 
ஏழையின் வாழ்வு எதிலும்
.
 
உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
 என் பிதாவே என் யெகோவா
ஜெபம்
            எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்த வாழ்க்கை துணைக்காய் உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். உம்முடைய சித்தத்தின்படி நீர் இணைத்தீர் ஐயா. வாழ்க்கையில் வரும் துன்பங்களிலும், பாடுகளிலும் நாங்கள் மனம் சோர்ந்து போய் விடாதபடி, ஏன் கர்த்தர் இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையை கொடுத்தார் என்று முறுமுறுக்காதபடி, தேவன் எல்லாவற்றையும் நன்மையாகவே செய்வார் என்று உம் மேல் முழு நம்பிக்கையையும் வைக்கவும், உம்முடைய சித்தத்திற்கும், நடத்துதலுக்கும் ஒப்புக்கொடுத்து, அதன்படி வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.





No comments:

Post a Comment