★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Monday, December 3, 2012

புதிய வானம் புதிய பூமி


          பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. - (வெளிப்படுத்தின விசேஷம் 21:1).

         புதிய வானத்தையும், புதிய பூமியையும் குறித்து அநேக வேத பண்டிதர்கள் வித்தியாசமான வியாக்கியானங்களை கொடுத்துள்ளனர். நோவாவின் காலத்தில் இருந்த உலகம் தண்ணீரினால் அழிக்கப்பட்டாலும், அதே உலகம் தான் இப்போது நாம் இருப்பது. ஆகவே நாம் வாழும் இந்த உலகம் நெருப்பினால் அழிக்கப்பட்டாலும், தேவன் அதன் ரூபத்தை மாற்றி, புதிய பூமியாக மாற்றுகிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
.
          ஆனால் வேதம் தெளிவாக கூறுகிறது, 'கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.  இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்' (2பேதுரு 3:10-13). இந்த வசனத்தின்படி, வானங்களும், பூமியும், அதிலுள்ள கிரியைகளும் வெந்து அழிந்து போகும் என்று பரிசுத்த பேதுரு எழுதுகிறார்.
.
மட்டுமல்ல, நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும், புதிய பூமியும் உண்டாகும் என்றும் கூறுகிறார். 'நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்' (ஏசாயா 66:22). இந்த வசனத்தின்படியும், தேவன் மீண்டும் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைக்கப்போகிறார். ஆகவே இப்போதிருக்கிற அநீதி வாசம் செய்கிற இந்த பூமி அக்கினியினால் வெந்து அழியப்போகிறது.
.
          இந்த பூமிதான் எனக்கு சதம் என்று சொல்லி, நிலத்தின்மேல் நிலம் வாங்கி, வீடு கட்டிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்களின் எல்லா சம்பாத்தியமும் அக்கினியால் வெந்து அழியும். வானம் மடமடவென்று அகன்றுபோகும். புதிய வானமும், புதிய பூமியும் தோன்றும். அதில் வாசம் செய்பவர்கள் நீதியுள்ளவர்களாக இருப்பார்கள். பாவிகளும், துரோகிகளும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப்பின் எரியும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டப்பின் பரிசுத்தமுள்ளவர்கள் வாசம் செய்யும்படியாக புதிய பூமியையும், புதிய வானத்தையும் தேவன் மீண்டும் உருவாக்குகிறார். அல்லேலூயா!
.
          வெளிப்படுத்தின விசேஷத்தின் கடைசி இரண்டு அதிகாரங்களிலும் ஏழு புதிய காரியங்களைக் குறித்து வாசிக்கிறோம். அவை புதிய வானம், புதிய பூமி, புதிய மக்கள், புதிய எருசலேம், புதிய ஆலயம், புதிய வெளிச்சம், புதிய பரலோகம் ஆகும்.  'யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது' (2ம் வசனம்). புதிய வானமும், புதிய பூமியும் வந்தப்பின், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தை விட்டு இறங்கி வருகிறது. கர்த்தரால் மீட்கப்பட்ட அனைவரும் அதில் வாசம் செய்வார்கள்.
.
            'மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்' (3ம் வசனம்). ஆதியிலே தேவன் ஆதாம் ஏவாளோடு எப்படி ஐக்கியம் கொண்டிருந்தாரோ அதைப்போல அவருடைய வாசஸ்தலம், மனுஷர்களாகிய நம்மோடுக் கூட இருக்கும். பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்று பிரிவுகள் இல்லாமல், நாம் தேவனோடு ஐக்கியமாயிருப்போம். அவர் நம்மோடுக்கூட வாசம் செய்வார். அல்லேலூயா!   'அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்;  இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது' (4ம் வசனம்).
.
            அந்த பரிசுத்த ஸ்தலத்தில் இனி பாவம் இராது. பாவத்தை கொண்டு வரும் சாத்தான் இல்லாதபடியால், பாவம் இராது. சாபம் இராது, பாவத்தினால் சபிக்கப்பட்ட உலகம், இல்லாது போனபடியால், இனி சாபம் இராது. இனி ஒரு சாபமுமிராது (22:3)  துக்கமிராது. ஏனெனில் தேவன் தாமே, ஒவ்வொருவருடைய கண்ணீரையும், துக்கத்தையும் துடைத்து விடுவதால், இனி துக்கமிராது.
.
              வேதனையோ, வருத்தமோ இராது. பரலோகத்தில் வியாதி இல்லாதபடியால், அங்கு வருத்தமிராது. கேன்சர் வியாதிகளும், பயங்கர வலிகளும், வேதனைகளும் அங்கு இராது. அனைவருக்கும் பூரண ஆரோக்கியம் உண்டாயிருக்கும்.
.
         மரணமிராது. நம் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் கொடிய மரணம் இங்கு இராது. மட்டுமல்ல, நம் பிரிய இயேசுவோடு என்றும் வாழும் பாக்கியம் கிடைக்கும். இத்தனை அற்புதமாக பரலோகத்திற்கு நாம் செல்ல வேண்டாமா?
.
        இருள் இராது. இரவில் சாத்தானின் சதி திட்டங்கள் அங்கு இராது. கர்த்தரே வெளிச்சமாயிருப்பார். அவர் எப்போதும் அங்கு வாசம் செய்வதால், அவருடைய பிரசன்னமே அங்கு வெளிச்சமாயிருக்கும். அங்கு சூரியனோ, சந்திரனோ ஒளிக்கொடுக்க வேண்டிய அவசியமிராது. ஆட்டுக்குட்டியானவரே வெளிச்சமாயிருப்பார். அல்லேலூயா!
.
         'சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.  ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்' (5-8 வசனங்கள்).
.
         இத்தனை அற்புதமான பரலோகத்திற்கு நாம் வாசம் செய்யும்படியாக தேவன் நம்மை அழைக்கிறார். இந்த பரலோகம் உண்மை, இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்று சொல்லி, 'நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.  ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்' என்று நம்மை ஜெயமுள்ள வாழ்க்கை வாழும்படி அழைக்கிறார்.
.
          இலவசமாய் கொடுக்கப்படும் இந்த அற்புத வாழ்க்கையை தெரிந்து கொள்வதும், தெரிந்து கொள்ளாததும் நம் கரத்தில்தான் இருக்கிறது. இந்த அற்புத பரலோகத்தில் யார் வாசம் செய்ய மாட்டார்கள் என்றும் அவரே ஒரு வரிசையைக் கொடுக்கிறார். 'பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்' என்று அவர் கொடுத்திருக்கும் இந்த வரிசையில் நம்மில்  ஏதாவது ஒரு பாவம் காண்படுமேயானால்  நம்மை நாமே திருத்திக் கொள்வோமா?  தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் என்று சொன்னவர் ஆவலோடு நாம் அவரை ஏற்றுக்கொண்டு, அவர் கொடுக்கும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படி அழைக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவரோடு நித்திய நித்தியமாய் வாழும் சிறந்த பரலோக வாழ்க்கையை தெரிந்து கொள்வோமா?  ஆமென் அல்லேலூயா!

.
 
  பரலோகமே என் சொந்தமே
  என்று காண்பேனோ?
  என் இன்ப இயேசுவை நான்
  என்று காண்பேனோ?
.
 
வருத்தம் பசி தாகம் 
  மனத்துயரம் அங்கே இல்லை
  விண் கிரீடம் வாஞ்சிப்பேன் 
  விண்ணவர் பாதம் சேர்வேன் 

ஜெபம்

          எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, புதிய வானத்தையும் புதிய பூமியையும் குறித்து நாங்கள் இன்று தியானிக்க தேவன் பாராட்டின கிருபைக்காக உம்மைத் துதிக்கிறோம். நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியில் வாசம் செய்யும் பெரிதான கிருபையை இந்த கட்டுரையை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவீராக. ஒருவராவது விட்டுப்போகாதபடி, ஒவ்வொருவரும் நீர் இலவசமாய் தந்தருளும் இந்த கிருபையை பெற்று கொள்ள பாத்திரர்களாக மாற்றுவீராக. தேவன் அருளும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, பரிசுத்தமாய் தங்களை காத்து, பரலோக இராஜ்யத்தில் பங்கடைய தேவன் தாமே கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.



No comments:

Post a Comment