★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Wednesday, December 5, 2012

பரம எருசலேம்



              பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடமிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். - (வெளிப்படுத்தின விசேஷம் 21:9-10).



      பரம எருசலேம் தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிறதை பரிசுத்த யோவான் காண்கிறார். அந்த எருசலேமின் அழகைக் குறித்து, அந்த அதிகாரம் முழுவதும் விளக்குகிறார். அதை படித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது (11ம் வசனம்). விலையுயர்ந்த இரத்தினக்கல் எப்படி ஒளிவிடுமோ அதைப் போலவும், மிகவும் பிரகாசமானதாகவும் அந்த நகரம் காணப்பட்டது. ஏனெனில் தேவனுடைய பிரசன்னமும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்பவராகிய தேவன் அந்த நகரத்தில் இருப்பதால், அது மிகவும் பிரகாசமாக காணப்படுகிறது.





           அதற்குப் பெரிதும் உயரமுமானமதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன' (12ம் வசனம்) ஆம், அந்த நகரத்திற்கு உயரமான மதில் இருந்தது, ஏனெனில் அதற்குள் வாசமாயிருப்பவர்கள், கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள். இந்த நகரத்தை விளக்கும்படி, பரிசுத்த ஆவியானவர் அதன் மதில்களிலிருந்து ஆரம்பிக்கிறார்.  


                 அதன் மதில் சுவர்களின் உயரம் சுமார் 1380 மைல்கள் என்று கூறப்படுகிறது. சதுரமாக அமைந்துள்ள அந்த நகரத்தின் ஒவ்வொரு பக்க மதில் சுவர்களிலும் மூன்று வாசல்கள் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாசலின் முன்பாகவும் ஒரு தூதனும், அதன் மேல் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. இவை பழைய ஏற்பாட்டு விசுவாசிகளும் இந்த நகரத்தின் ஒரு அங்கமாக இருப்பார்கள் என்பதை குறிக்கிறது.



               'நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன' (14ம் வசனம்). நகரத்தின் அஸ்திபாரம் கிறிஸ்துவே. அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரக்கற்களாக பன்னிரண்டு அப்போஸ்தலரின் நாமங்கள் எழுதப்பட்டிருந்தன.



                அந்த நகரம் சதுரமாயிருந்தது' (16ம் வசனம்). மோசே வனாந்தரத்தில் செய்த சாட்சியின் கூடாரமும், தேவாலயமும்  நீளமான சதுரமாக (Rectangle) இருந்தது.  ஆனால் பரம எருசலேமோ சதுரமாக இருந்தது என்றுப் பார்க்கிறோம்.



             அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்;  அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது' (16-17 வசனங்கள்). இதை சரியானபடி அளந்து பார்த்தால், அதன் மொத்த அளவு 1,904,000 square miles  ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, 20 பில்லியன் மக்கள் இருந்தாலும், ஒவ்வொருவரும் வசதியாக வாழும்படியான இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பரலோகத்தை எத்தனை பேர் வந்து நிரப்பினாலும் அது நிரம்பாது. அது அத்தனை பெரிய நகரமாகும். அல்லேலூயா!

.

             அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி' இவைகளே (18-20 வசனங்கள்).

.

     நகரத்தின் மதில்கள்  - வச்சிரக்கல் (Jasper)

     நகரம்            - சுத்தப்பொன் (Pure Gold)

 அதன் அஸ்திபாரங்கள் 12 வகையான விலையேறப்பெற்ற கற்கள். அவை:

.

   1. வச்சிரக்கல்      - Jasper



  2. இந்திரநீலம்     - Sapphire



 3. சந்திர காந்தம்  - Chalcedony



 4. மரகதம்            - Emerald



 5. கோமேதகம்    -  Sardonyx



  6. பதுமராகம்      -  Sardius0



  7. சுவர்ணரத்தினம் -  Chrysolyte



  8. படிகப்பச்சை      -  Beryl



  9. புஷ்பராகம்         -  Topaz 



10. வைடூரியம்         -  Chrysopasus



11. சுநீரம்                 -  Jacinth



12. சுகந்தி                 -  Amethyst





                  இப்படியாக இந்தநகரத்தின் அஸ்திபாரங்கள் விதவிதமான விலையேறப்பெற்ற கற்களால் கட்டப்பட்டிருந்தது. நாம் சில கற்களை கண்டிருக்கவும் மாட்டோம். ஆனால் இவைகளால் அஸ்திபாரமிடப்பட்டிருக்கும் 'இந்த நகரத்தின் பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொருவாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது' (21ம் வசனம்). இந்த வீதிகளில் நாம் உலாவரும்போது அது எத்தனை அருமையானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருக்கும்!


          அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.  நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை;



             ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம்அதில் பிரவேசிப்பார்கள்' (22-27 வசனங்கள்).  இத்தனை அருமையான பரலோகம் நமக்கு சொந்தமாக வேண்டுமே! 'எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை' (1 கொரிந்தியர் 2:9).   ஆம், இவைகளை நாம் களிகூரும்படியாகவே தேவன் உண்டாக்கியிருக்கிறார். நாம்; இப்போது படிப்பதைக்காட்டிலும் அதிகமாக அதனுடைய மகிமை காணப்படும்.



       அங்கு தேவாலயம் இல்லை, ஏனெனில் தேவனுடைய பிரசன்னம் அங்கு எப்போதும் இருப்பதால், விசுவாசிகள் தேவனுடைய பிரசன்னத்தில் எப்போதும் இருப்பதால் அங்கு தேவாலயம் இல்லை.


              சூரியனும் சந்திரனும் அங்கே தேவையில்லை. ஏனெனில் உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்துவே அதற்கு விளக்காயிருப்பார். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் நம் பெயர் இருக்க வேண்டும். அப்படி எழுதப்பட்டவர்கள் மாத்திரமே அந்த நகரத்தில் பிரவேசிக்க முடியும். நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறதா?



           தேவனுடைய முக தரிசனத்தை எந்த நேரமும் பார்த்து இரசிப்பது எத்தனை மகிமையான காரியம்! வேதனைகளோ, துக்கமோ, துயரமோ, கண்ணீரோ இல்லாத பரலோக ராஜ்யம் நமக்கு இலவசமாக கொடுக்கபடுகிறது.


           நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அந்த இராஜ்யம் நமக்கு அருளப்படுகிறது. நாம் எதை தெரிந்து கொள்வோம்? தேவன் தரும் இந்த அற்புத கிருபையை நம்மில் ஒருவரும் இழந்து போகாதபடி நம்மை பரிசுத்தமாய், ஜாக்கிரதையாய் காத்துக் கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!

 



.



 பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே



 அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே



.

 கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்



எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்



மரணமில்லை மன நோயின் துயரமில்லை



அலறலில்லை அழுகையின் சோகமில்லை தலைநகராம் எருசலேமே



 

                                   ஜெபம்                               

              எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பரம எருசலேமின் அலங்காரத்தை குறித்து இந்த நாளில் காண கிருபை செய்தீரே உமக்கு நன்றி. கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் இ;நத நகரத்தில் வாசம் செய்வார்கள் என்று எழுதியிருக்கிறபடி, நாங்கள் கர்த்தரால் மீட்கப்பட்டவர்களாக, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்களாக காணப்பட கிருபை செய்யும். விலையேறப்பெற்ற கற்களாலும், தூய பொன்னினாலும் அலங்கரிக்கப்பட்ட புதிய எருசலேம் நகரில் உம்முடைய முக தரிசனத்தை தரிசித்தவர்களாக நாங்கள் எங்கள் நித்தியத்தை கழிக்க எங்களை தகுதிப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

No comments:

Post a Comment